குடோனில் பதுக்கி இருந்த 350 கிலோ குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே குடோனில் பதுக்கி இருந்த 350 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குருபரப்பள்ளி:-
கிருஷ்ணகிரி அருகே குடோனில் பதுக்கி இருந்த 350 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி பகுதியில் குட்கா கடத்தலை தடுக்க மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போகனப்பள்ளி- பூசாரிப்பட்டி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஸ்கூட்டரில் 10 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜிகேந்திர படேல் (வயது 24) என்பதும், வடமாநிலத்தைச் சேர்ந்த அவர் கிருஷ்ணகிரி நகரில் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
350 கிலோ குட்கா பறிமுதல்
மேலும் போகனப்பள்ளி சுடுகாடு அருகே உள்ள குடோனில் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மகராஜகடை போலீசார் ஜிகேந்திரபடேல் கூறிய குடோனுக்கு சென்று அதிரடி சோதனையிட்டனர். அதில் குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மொத்தம் 350 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜிகேந்திர பட்டேலை போலீசார் கைது செய்தனர்.