350 லிட்டர் போலி மதுபானம் பறிமுதல்


350 லிட்டர்   போலி மதுபானம் பறிமுதல்
x

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 350 லிட்டர் போலி மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 350 லிட்டர் போலி மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

வாகன சோதனை

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு போலி மதுபானம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ெடம்போ வேகமாக வந்தது.

போலி மதுபானம் கடத்தல்

இதையடுத்து அந்த டெம்போவை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்ேபாது அதில் 4 கேன்கள் மற்றும் பாட்டில்களில் போலி மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெம்போவில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெம்போவில் இருந்த கேன்களிலும், பாட்டில்களிலும் மொத்தம் 350 லிட்டர் போலி மதுபானம் என்பது தெரியவந்தது. அதை அவர்கள் கேரளாவிற்கு கடத்த முயன்ற போது போலீசில் சிக்கினர்.

3 பேர் கைது

மேலும் போலி மதுபானம் கடத்தியதாக கேரள மாநிலம் பாலராமபுரம் ஆத்தியூரை சேர்ந்த அல் அமீன் (வயது 32), சாரோட்டுகோணத்தை சேர்ந்த பிரசாத் (28), மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை கவியலூரை சேர்ந்த ஆல்பர்ட் ஆகிய 3 பேரை கைது செய்து போலி மதுபானத்தையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலி மதுபானத்தை எங்கிருந்து கடத்தி சென்றார்கள்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடந்து வருகிறது.


Next Story