வாடிப்பட்டியில் வாடகை வீட்டுக்குள் புகுந்து 36 பவுன் நகை, ரூ.6½ லட்சம் திருட்டு - வீட்டு உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு


வாடிப்பட்டியில் வாடகை வீட்டுக்குள் புகுந்து 36 பவுன் நகைகள், ரூ.6½ லட்சத்தை திருடிய வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டியில் வாடகை வீட்டுக்குள் புகுந்து 36 பவுன் நகைகள், ரூ.6½ லட்சத்தை திருடிய வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் தினேஷ் குமார். இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு சொந்தமான வீட்டின் கீழ் பகுதியில் குடியிருந்து கொண்டு மேல் பகுதியை வாடகைக்கு விட்டுள்ளனர்.

மேல் தளத்தில் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் கயிறு தொழிற்சாலை நடத்தி வரும் ராமநாதன் (53) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இதில் தொழில் காரணமாக ராமநாதன் வீட்டை அடிக்கடி பூட்டிவிட்டு வெளியூர் சென்று விடுவார். கடந்த 9-ந்தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் பீரோவில் இருந்த பொருட்களை பரிசோதித்து பார்த்தபோது வைரத்தோடு, கல்தோடு, செயின், வளையல் உள்ளிட்ட 36 பவுன் தங்க நகைகளும், ரொக்க பணம் ரூ.6. லட்சத்து 35 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமநாதன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

வீட்டு உரிமையாளருக்கு வலைவீச்சு

அப்போது வீட்டின் உரிமையாளர் யமுனா தான் வைத்திருந்த வீட்டின் மற்றொரு சாவியை பயன்படுத்தி நகை, பணம் திருடுவது பதிவானது தெரிய வந்தது. இது சம்பந்தமாக ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்ய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வீட்டு உரிமையாளர் யமுனாவை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டை பாதுகாக்க வேண்டிய உரிமையாளரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story