குலசேகரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் 38 பேர் கைது
குலசேகரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
குலசேகரம்:
குலசேகரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி
இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
அதை கண்டித்து குலசேகரம் சந்தை சந்திப்பில் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சந்தை சந்திப்புக்கு இந்து முன்னனி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், கோட்டப் பொறுப்பாளர் மிஷா சோமன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன் உள்பட பலர் வந்தனர்.
38 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ேபாலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த 3 பெண் நிர்வாகிகள் உள்பட 38 பேரை கைது செய்தனர். அவர்கள் குலசேகரம் செருப்பாலூர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு இருந்த இந்து முன்னணியினர் மதியம் உணவு உண்ணாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி சந்தை சந்திப்பு, செருப்பாலூர் சந்திப்பு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோஷம்
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் அருகில் மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட பா. ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் திரண்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு 3 பெண் நிர்வாகிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.