காளை விடும் விழாவில் 380 மாடுகள் சீறிப்பாய்ந்தன


காளை விடும் விழாவில் 380 மாடுகள் சீறிப்பாய்ந்தன
x

செதுவாலை மற்றும் மேல்மாங்குபத்தில் நடந்த காளைவிடும் விழாவில் 380 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

வேலூர்

காளைவிடும் விழா

அணைக்கட்டு தாலுகா செதுவாலை கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 23-ம் ஆண்டு காளைவிடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் மகேஸ்வரி, செதுவாலை ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணைத் தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் துர்கா முரளிகுமார் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழா தொடங்கியது.

பல்வேறு ஊர்களில் இருந்து 150 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு 150 காளைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடின.

கட்டணம் வசூலிக்கக்கூடாது

அப்போது தெருவில் நின்று மாட்டின் மீது கையை போட்டு விசில் அடித்த வாலிபர்களை தூக்கி வீசி எறிந்தது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். பத்துக்கும் மேற்பட்ட காளைகள் சவுக்குக் கட்டைகளை உடைத்துக்கொண்டு ஓடியது.

விரிஞ்சிபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர், குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியை கண்காணித்தனர்.

அதிவேகமாக ஓடி குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் என 37 பரிசுகள் வழங்கப்பட்டன. விழா கண்காணிப்பு பணிகளை வருவாய் ஆய்வாளர் ரஜினி, கிரா நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர். விழா இடையே திடீரென அங்கு வந்த டெல்லியை சேர்ந்த இந்திய விலங்குகள் நல வாரியத்தின் ஜல்லிக்கட்டு மட்டும் எருது விடும்விழா ஆய்வுக்குழு உறுப்பினர் மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளை விடும் நிகழ்ச்சியில் காளைகள் பங்கேற்க பதிவு செய்ய விலங்குகள் நல வாரியமோ, வருவாய்த்துறையோ, விழாக்குழுவோ பணம் வசூல் செய்யக்கூடாது. ஆனால் இங்கு நுழைவு கட்டணமாக வசூல் செய்து காளைகளை விடுகின்றீர்கள் என்றார்.

மேல்மாங்குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா மேல்மாங்குப்பம் கிராமத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது. தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், தேசிய வனவிலங்குகள் நலவாரிய தலைவர் மிட்டல், கே.வி.குப்பம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, கே.வி.குப்பம் ஒன்றிய குழு உறுப்பினர் வேங்கையன், வேலூர் மண்டல கால்நடை உதவி இயக்குனர் கோ.அந்துவன், கிராம நிர்வாக அலுவலர் மோகனா, மருத்துவத் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 240 மாடுகள் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 230 காளைகள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது ஓடு பாதையின் குறுக்கே நின்ற வாலிபர்கள் மீது காளைகள் முட்டி 10 பேர் காயம் அடைந்து முதல்உதவி சிகிச்சை பெற்றனர். 8 மாடுகளுக்கும் காயம் ஏற்பட்டது.

முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.80 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.65 ஆயிரம் உள்பட மொத்தம் 101 பரிசுகள் வழங்கப்பட்டன. மாடு விடும் விழா சரியாக 2 மணிக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் காத்திருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாட்டு உரிமையாளர்கள் தங்களின் மாடுகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று விழாக் குழுவினரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை, விழாக்குழுவினரிடம் செலுத்திய நுழைவுக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story