சங்ககிரி ஜமாபந்தியில் 387 மனுக்கள் பெறப்பட்டன
சங்ககிரியில் நடந்த ஜமாபந்தியில் 387 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சங்ககிரி:
ஜமாபந்தி
சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த ஜமாபந்தியில் தேவூர் குறுவட்டத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணி, தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி உள்பட 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்று, குடும்ப அட்டை, வருமான சான்று, சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று உள்பட மொத்தம் 387 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இந்த கோரிக்கை மனுக்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வு
பின்னர் 2 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கலெக்டர் கோனேரிப்பட்டியை லோகநாதன் என்பவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மற்றும் விக்னேஷ் என்பவருக்கு அவருடைய தாத்தாவுக்கான இறப்பு சான்றிதழை வழங்கினார். முன்னதாக கலெக்டர் கார்மேகம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் பதிவேடுகள், வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஜமாபந்தியில் சேலம் மாவட்ட நில அளவை துறை உதவி இயக்குனர் ராஜசேகர், மாவட்டவேளாண்மை துறை இணை இயக்குனர் சிங்காரம், சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, தனி தாசில்தார்கள் ராஜேந்திரன், லெனின், மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.