அணைகளில் 39 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது
குமரி மாவட்ட அணைகளில் 39 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
குலசேகரம்,
குமரி மாவட்ட அணைகளில் 39 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட அணைகள்
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட குமரி மாவட்டத்தில் வேளாண்மைக்கு தேவையான தண்ணீரைத் தரும் அணைகளாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் உள்ளன.
மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கன்னிப்பூ, கும்பப்பூ என 2 பருவ நெல் சாகுபடி நடைபெறும் நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும், கும்பப்பூ சாகுபடிக்காக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையும் அணைகளில் இருந்து தண்ணீர் விடுவது வழக்கம்.
மூடப்பட்டன
இந்தநிலையில் மாவட்டத்தில் நடப்பாண்டில் 2 பருவ நெல் சாகுபடியும் நிறைவடைந்த நிலையில் பாசன பகுதிகளில் கூடுதல் தண்ணீர் தேவைப்பட்ட நிலையில் கடந்த 20-ந் தேதி அணைகள் மூடப்பட்டன.
பின்னர் குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து மட்டும் ஓரிரு நாட்கள் தண்ணீர் வினியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அணையும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
39 சதவீத தண்ணீர் இருப்பு
தற்போது பேச்சிப்பாறை அணையில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதர அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.
நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 34.64 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 34.20 அடியாகவும், சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 8 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 8.10 அடியாகவும் இருந்தது. இந்த 4 அணைகளிலும் மொத்தம் 3,229 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது இந்த 4 அணைகளின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவான 8,233 மில்லியன் கன அடிக்கு 39 சதவீதமாகும்.
தொடரும் மழை
இதற்கிடையே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் மேல் கோதையாறு அணையில் இருந்து கோதையாறு மின் நிலையங்களுக்கு வரும் தண்ணீரும் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக வந்து கொண்டிருக்கிறது. அதே வேளையில் அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையானது நாகர்கோவில் உள்பட நகர பகுதிகளில் பெய்யாமல் உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வெயில் நிலவ வாய்ப்புள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டமும் 8.20 அடி என்ற அளவிலேயே உள்ளது.
எனவே கோடையில் மழை பெய்தால் மட்டும் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது அணைகளில் மொத்தமாக 39 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இது திருப்திகரமான அளவாகும். மேலும் அணை பகுதிகளில் மழை பொழிவும் உள்ளது. மேலும் மாவட்டத்தில் வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.