ரூ.3½ கோடிக்கு கடன் ஒப்புதல்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தொழில் முனைவோர் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3½ கோடிக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரூ.3½ கோடிக்கு கடன் ஒப்புதல்
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுடன் இணைந்து 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் தொழில் முனைவோர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கனரா வங்கி உதவி பொது மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அசோக்குமார், உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், அரசின் தனிநபர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து கூறினார்கள். பயனாளிகளுக்கு தாட்கோ, பி.எம்.இ.ஜி.பி., பி.எம்.ஸ்வாநிதி, கல்விக்கடன் ஆகிய திட்டங்களில் வரைவோலை மற்றும் ஒப்புதல் கடிதம் ரூ.3 கோடியே 45 லட்சத்துக்கு வழங்கப்பட்டது.
கடன் விண்ணப்பங்கள்
அரசு மற்றும் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்த தகவல்களை மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற அரசு துறைகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த தகவல்களை சிட்பியும், சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்களை ஆர்.எஸ்.இ.டி.ஐ. மற்றும் பிரதம மந்திரியின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை நிதிசார் கல்வி மையமும் எடுத்துக்கூறின.
இதில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, டி.பி.எஸ்.வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடன் விண்ணப்பங்களை வங்கிகள் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.