வடமாநில தொழிலாளர்களை சித்ரவதை செய்த 3 பேர் கைது


வடமாநில தொழிலாளர்களை   சித்ரவதை செய்த 3 பேர் கைது
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே வேலை தருவதாக கூறி வடமாநில ெதாழிலாளர்களை அடைத்து சித்ரவதை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வட மாநில தொழிலாளர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் மவுலி (வயது21) தனது நண்பர்கள் 7 பேருடன் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அங்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் வேறு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களில் வேலை தேடி உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி திரிவதை பார்த்த 3 பேர் எங்களுக்கு தெரிந்த பனியன் நிறுவனத்தில் நிரந்தர வேலையும், கை நிறைய சம்பளம் மற்றும் தங்குவதற்கு இடம் மற்றும் உணவு இலவசமாக கிடைக்கும் என்று கூறி உள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள் 8 பேரையும் அழைத்துக்கொண்டு சென்ற 3 பேர் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

வட மாநில தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சென்ற வாலிபர்கள் 2 நாட்கள் கழித்து நாங்கள் சொல்லும் பனியன் கம்பெனியில் தான் வேலை பார்க்க வேண்டும் உங்கள் சம்பளத்தை நாங்கள் வாங்கிக் கொள்வோம் சாப்பாடு மட்டுமே கிடைக்கும் என்று கூறி அவர்களை உருட்டு கட்டையால் தாக்கி சித்ரவதை செய்ததுடன் அவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு வீட்டில் பூட்டி உள்ளனர்.

3 பேர் கைது

அடைத்து வைக்கப்பட்டிருந்த வட மாநில தொழிலாளிகள் 8 பேரில் ராஜ்மவுலி என்ற வாலிபர் அங்கிருந்து தப்பி ஊத்துக்குளி போலீஸ் நிலையம் சென்று இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். ஊத்துக்குளி போலீசார் அவர் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று முதலிபாளையம் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 7 ஜார்க்கண்ட் வாலிபர்களை மீட்டனர்.

அவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்த திருப்பூர் காங்கேயம் ரோடு சின்னசெம்மேட்டைச்சேர்ந்த ரங்கசாமி சிவக்குமார் (35), கர்நாடகா கொள்ளேகால் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (26), கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டி வடமல்லார்பட்டியை சேர்ந்த நிசாத் (25) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வடமாநில தொழிலாளர்களை வேலை தருவதாக கூறி ஏமாற்றி அவர்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story