3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி வல்லுனர் குழு ஆய்வு
பழனி முருகன் கோவிலில், 3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி வல்லுனர் குழு ஆய்வு செய்தனர்.
மின்இழுவை ரெயில்
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து எளிதில் சென்றுவர 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில், பழனி முருகன் கோவிலுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 2 ரெயில் பெட்டிகள் வாங்கப்பட்டன.
இந்த ரெயில் பெட்டிகளை 3-வது ரெயில் தண்டவாளத்தில் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக 3-வது ரெயில்நிலைய நடைமேடை மாற்றி அமைக்கப்பட்டு ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இணைக்கப்பட்டன.
இதனையடுத்து ரெயில் இயக்கத்துக்கு பிரத்யேக 'சாப்ட்டு' எந்திரம் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் 3-வது மின்இழுவை ரெயிலில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழுவினர், பழனிக்கு வந்து 2-ம் கட்ட சோதனை செய்தனர். அப்போது ரெயில் பெட்டிகளில், சுமார் 3 டன் அளவில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து இயக்கி ஆய்வு செய்தனர்.
3-ம் கட்ட சோதனை
இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை தலைமை பொறியாளர் இசைஅரசன் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மின்இழுவை ரெயில் இயக்கம் குறித்து கோவில் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கோவில் மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் 3-வது மின்இழுவை ரெயிலை இயக்கி தலைமை பொறியாளர் மற்றும் வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். ரெயில் பெட்டி இயக்கம், கம்பிவடம், 'சாப்ட்டு' எந்திரம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின்போது இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பொறியாளர்கள் உடனிருந்தனர்.