வேதாரண்யத்தில் 3-வது முறையாக உப்பு உற்பத்தி தொடக்கம்


வேதாரண்யத்தில் 3-வது முறையாக  உப்பு உற்பத்தி  தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழையால் 2 முறை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் 3-வது முறையாக உப்பு உற்பத்தி தொடக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மழையால் 2 முறை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் 3-வது முறையாக உப்பு உற்பத்தி தொடக்கப்பட்டுள்ளது.

9 ஆயிரம் ஏக்கர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறுகிறது

சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சுமார் 850 பேர் 3 ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

ஆண்டுதோறும் இங்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாத்திகளில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக கடந்த ஆண்டு(2022) நிறுத்தபட்டது.

இந்த ஆண்டு(2023) உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்கியது. அப்போது பருவம் தவறி மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

3-வது முறையாக தொடக்கம்

மழை நின்ற பிறகு மீண்டும் 25-ந்தேதி உப்பு உற்பத்தி பணியை தொடங்கி நடைபெற்ற வந்த நிலையில் இந்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி 2-வது முறையாக பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மீண்டும் 3-வது முறையாக உப்பு உற்பத்தி பணி தொடங்கப்பட்டது. தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பளங்களில் பாத்திகள் முறையாக சரி செய்யப்பட்டு உப்பு எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இலக்கை எட்ட தொழிலாளர்கள் தீவிரம்

இந்த ஆண்டு உப்பு உற்பத்தி ஜனவரி மாதமே தொடங்கியதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்ட வாய்ப்பு இருந்த நிலையில் மழையால் இரண்டு மாதம் முற்றிலும் உப்பு உற்பத்தி பாதித்தது. இதனால் உப்பிற்கு நல்ல விலை இருந்தும்உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது உப்பள தொழிலாளர்களும் 2023-ம் ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு, பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story