வக்கீலை தாக்கிய 4 பேர் கைது
திண்டுக்கல் அருகே வக்கீலை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). வக்கீல். இவர், தனது காரில் உறவினர்கள் சரண்குமார், பாண்டி ஆகியோருடன் காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அணைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரபாண்டியன் (34), மணிகண்டன் (37), மாசிலாமணி (21), புளிய ராஜக்காபட்டியை சேர்ந்த தஸ்வின் (24) ஆகிய 4 பேரும் சேர்ந்து காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அருண்குமாரிடம் ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எங்களுக்கு எதிராக நீ ஆஜராக கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் காரை சேதப்படுத்தி, கம்பி மற்றும் கட்டையால் அருண்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வர பாண்டியன், தஸ்வின், மணிகண்டன், மாசிலாமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.