புலிப்பல்-நகங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது


புலிப்பல்-நகங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது
x

கடம்பூர் அருகே புலிப்பல்-நகங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே புலிப்பல்-நகங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

புலிப்பல்-நகங்கள்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட சின்ன உள்ளேபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக புலிப்பல் மற்றும் நகங்களை பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சின்ன உள்ளேபாளையத்தில் வசிக்கும் சந்தோஷ் (வயது 25) என்பவருடைய வீட்டில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டுக்குள் புலிப்பல், நகங்கள், எலும்புகள், சுமார் 2 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி ஓடுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

4 பேர் கைது

இதையடுத்து வனத்துறையினர் சந்தோசிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்தோஷ் அவைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவத்தில், பத்ரிபடுகையை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சந்தோஷ், மூர்த்தி, மாதேவன், ராஜப்பன் ஆகிய 4 பேரையும் கடம்பூர் வனத்துறையினர் கைது செய்தார்கள். மேலும் புலிப்பல், நகங்கள், எலும்புகள், எறும்புதின்னி ஓடுகள் ஆகியவை மீட்கப்பட்டன. அவைகள் 4 பேருக்கும் எப்படி கிடைத்தன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story