வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடுகளில் பட்டாசு தயாரிப்பு
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பட்டாசு தயாரிக்கும் பணி வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்ேபரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், வேலுச்சாமி, ஜவகர் ஆகியோர் தலைமையில் தாயில்பட்டி, வெற்றிலையூரணி, மேல ஓட்டம்பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
4 பேர் கைது
வெற்றிலையூரணியில் நடைபெற்ற சோதனையில் விஸ்வநத்தத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 65) என்பவர் பட்டாசு தயாரித்து கொண்டு இருந்தார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 20 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனர்.
மேல ஓட்டம்பட்டி கிழக்கு தெருவில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த ஜெகதீசன் (40) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 50 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனர்.
வெம்பக்கோட்டையில் சுப்புராஜ் (53), பாலமுருகன் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த தடை விதிக்கப்பட்ட சரவெடிகள் 25 பெட்டிகளையும் வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ. 75 ஆயிரம் என கூறப்படுகிறது.