கொடைக்கானலில் போதை காளான் விற்ற 4 பேர் கைது
கொடைக்கானலில் போதை காளான் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
கொடைக்கானல் மேல்மலை பகுதியில், சுற்றுலா பயணிகளை குறி வைத்து, போதை காளான்கள் விற்பனை செய்யப்படுவதாக கொடைக்கானல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பூம்பாறை கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு போதை காளான்களை விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த விஷ்ணு (வயது 30), பிரசாத் (37), திருவனந்தபுரம் பெருங்குளத்தை சேர்ந்த முகமது அப்சல்கான் (26), பூம்பாறையை சேர்ந்த சந்திரமோகன் (57) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 கிராம் போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story