கள்ளச்சாராயம் கடத்திய 4 பேர் கைது


கள்ளச்சாராயம் கடத்திய 4 பேர் கைது
x

கள்ளச்சாராயம் கடத்திய திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்த 22 பேர் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து சிலர் தமிழக எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 8 சப்-இன்ஸ்பெக்டர், 60 போலீசார் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாட்டூர், சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, மிட்ட கண்டிகை, அருங்குளம், ஆந்திர மாநிலம் மங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை சாராய தேடுதல் வேட்டை நடத்தினர். தமிழக எல்லையில் நடைபெற்ற இந்த சாராய தேடுதல் வேட்டையை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

இந்த திடீர் சோதனையில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கிரிதரன் (வயது 25), அரக்கோணம் தாலுகா வேலூர்பேட்டையை சேர்ந்த அரி (வயது 28), சிவாடா காலனியைச் சேர்ந்த வரதராஜ் (வயது 40), மிட்டகண்டிகையை சேர்ந்த சீனிவாசன் (வயது 38) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story