வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேர் கைது


வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேர் கைது
x

வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேர் கைது

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி தலைவர் உள்பட 7 பேர் உசிலம்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ஊராட்சி தலைவர் கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தவர் கணேசன். இவரை கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிலர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணவாளநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ்குமார் (வயது 28) என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

கடந்த 15-ந் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சந்தோஷ்குமார், தினசரி எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள குளக்கரைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனின் மகனும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவருமான பிரபாகரன் தனது நண்பர்கள் விக்கி, கவியரசன், கார்த்தி, சாமிநாதன், தீனா, ராஜேஷ், வெங்கடேசன், மதன்குமார் ஆகியோருடன் காரில் வந்து சந்தோஷ்குமார் மீது காரை விட்டு மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்தோஷ்குமாரை, பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

வலைவீச்சு

இதுதொடர்பாக எரவாஞ்சேரி போலீசில் சந்தோஷ்குமாரின் தாய் பூங்கோதை புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி தலைவர் பிரபாகரன் மற்றும் பலரை வலைவீசி தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த குமரேசன்(22), கவியரசன்(20), கார்த்தி(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன்(30) மற்றும் சாமிநாதன்(32), வெங்கடேசன(25)், பிரகாஷ்(22), கணபதி(25), ரமேஷ(35)், தீபக்(22) ஆகிய 7 பேரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார் உடல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

-----------


Next Story