திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு;போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு
திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி,
திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
ஆரல்வாய்மொழி தெற்குபெருமாள்புரம் பகுதியில் நள்ளிரவில் வேலு என்பவரின் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் திருடர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், அவர்களுடைய செல்போன்களையும் எடுத்து சென்றனர். இரவு என்பதால் திருடர்களை கொண்டு செல்ல முடியாது என அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.
இதனால் பொதுமக்கள் விடிய விடிய காவல் காத்தனர். பின்னர் காலையிலும் போலீசார் அவர்களை அழைத்து செல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு எழுந்து சென்றனர். பின்னர் திருடர்களான தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஜோசப்ராஜ் (வயது 20) ஆகாஷ் (21) ஆகிய இருவரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சந்திரகுமார் (36) கொடுத்த புகாரின்பேரில் ஜோசப்ராஜ், ஆகாஷ் ஆகிய இருவர்மீது வழக்குபதிவு செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் திரண்டனர்
இதேபோல தங்களை அடித்ததாக ஜோசப்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையறிந்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மனு கொடுத்துவிட்டு சென்றனர். அதில் மோட்டார் சைக்கிளை திருட வந்தவர்களை பிடித்தோம். போலீசார் கொண்டு செல்லாததால் கட்டிவைத்தோம். காலையில் வந்து போலீசார் அவர்களை கொண்டு சென்றனர். எனவே எங்கள் மீது வழக்கு போடப்பட்டால் அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருந்தனர்.