குடியிருப்பில் உலா வந்த 4 சிறுத்தைகள்


குடியிருப்பில் உலா வந்த 4 சிறுத்தைகள்
x

கோத்தகிரி அருகே நள்ளிரவில் குடியிருப்பில் 4 சிறுத்தைகள் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே நள்ளிரவில் குடியிருப்பில் 4 சிறுத்தைகள் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுத்தைகள் உலா

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பிரதான சாலை செல்கிறது. அங்கு அரவேனுவை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்ல சாலை உள்ளது. அந்த சாலையில் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு 2 கருஞ் சிறுத்தைகள், 2 சிறுத்தைகள் சாலையில் நடமாடின. பின்னர் அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு, 2 சிறுத்தைகள் திரும்பி வந்து மீண்டும் அதே சாலையில் உலா வந்தன.

பொதுமக்கள் அச்சம்

நள்ளிரவில் சாலையில் நடமாடிய சிறுத்தைகளை கண்டு, ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் குரைத்தன. இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகம் அடைந்து, பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தார். அப்போது 4 சிறுத்தைகள் தேயிலை தோட்டம் மற்றும் சாலையிலும் உலா வரும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் அச்சம் அடைந்தார்.

அடர்ந்த வனப்பகுதிகளில் அரிதாக கருஞ் சிறுத்தையை காண முடியும். ஆனால், குடியிருப்பு பகுதியில் நடமாடியதால் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து, வளர்ப்பு நாயை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story