காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
x

எடப்பாடி அருகே காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). இவர் எடப்பாடி கோணமோரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாளாகும்.

இந்த நிலையில் அவரது கல்லூரி நண்பர்களான 7 பேர் மற்றும் மேட்டூர் அரசு கல்லூரி மாணவர்களான 2 பேர் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டனர். இதையடுத்து அந்த 10 மாணவர்களும், நேற்று காலை 11 மணியளவில் கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டு தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அங்கு ஆற்றில் சுமார் 2 மணி நேரம் குளித்து மகிழ்ந்த அவர்கள், 1 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினர்.

அந்த மாணவர்கள் ஆற்றில் மேடான இடத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அனைத்து இடமும் ஒரே மேடாக தான் இருக்கும் எனக் கருதி 5 மாணவர்கள் தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்திற்கு ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு நடந்து சென்றனர்.

ஆற்றில் மூழ்கினர்

அப்போது கல்வடங்கம் காவிரி ஆற்றின் மறுகரையான ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் பகுதி காவிரி கரையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண்கள் அந்த மாணவர்களை பார்த்து இங்கே வரவேண்டாம் ஆழமான பகுதி என்று சத்தம் போட்டுள்ளனர்.

இந்த சத்தத்தை கேட்ட உடன் தப்பிக்க முயற்சிக்கும்போது அந்த 5 மாணவர்களும் கைகளை பிடித்தவாறு ஆற்றில் திடீரென மூழ்க தொடங்கினர். இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்களில் கரையில் நின்ற மாணவர்கள் கூச்சல் போட்டு 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறினர்.

அப்போது தண்ணீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவர் மட்டும் கைகளை விடுவித்துக்கொண்டு கரைக்கு தப்பி ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

தேடும் பணி

இதையடுத்து 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கிய சம்பவம் குறித்து உடனடியாக தேவூர் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தகவல் அறிந்து அங்கு வந்த கல்வடங்கம் மீனவர்களும் பரிசலில் சென்று ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு விரைந்து வந்த எடப்பாடி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரும் மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

4 உடல்களும் மீட்பு

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரான சேலம் மாவட்டம், இளம்பிள்ளை இ.காட்டூரை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (20) என்ற மாணவரின் உடல் மதியம் 2.30 மணியளவில் மீட்கப்பட்டது. தொடர்ந்து 3 மணியளவில் கொங்கணாபுரம் எருமைப்பட்டியை சோ்ந்த செல்வம் மகன் முத்துச்சாமி (20) என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது.

பின்னர் மாலை 5 மணிவரை தீயணைப்பு படையினரும், மீனவர்களும், போலீசாரும் தீவிரமாக தேடி ஆற்றில் மூழ்கிய மாணவர்களான எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் பாண்டியராஜன் (20), கன்னந்தேரி கோசேரிப்பட்டியை சேர்ந்த மாது மகன் மணிகண்டன் (20) ஆகியோரின் உடல்களை அடுத்தடுத்து மீட்டனர்.

இறந்த மாணவர்களின் உடல்களை பார்த்து ஆற்றின் கரையில் கூடியிருந்த மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. குறிப்பாக இறந்த மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவர்களும் கதறி அழுதனர். இதனால் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையே சோகமயமாக காட்சி அளித்தது.

போலீஸ் விசாரணை

பின்னர் ஆற்றில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் எடப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story