திற்பரப்பு அருவியில் ரூ.4¼ கோடியில் மேம்பாட்டு பணி ;அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.4¼ கோடியில் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.
குலசேகரம்,
திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.4¼ கோடியில் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.
மேம்பாட்டு பணி
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக தமிழக அரசு ரூ.4.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிக்கான அடிக்கல்லை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
திற்பரப்பு அருவிக்கு 2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 5,08,551 பேரும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 549 பேரும் வந்துள்ளனர். இந்த வருடம் ஜூலை மாதம் வரை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 4,46,474 பேரும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 852 பேரும் வந்துள்ளனர். மேம்பாட்டு பணியை தொடர்ந்து திற்பரப்பு அருவி மேலும் கண்கவர் இடமாக மாறும். இந்த பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு தங்கும் விடுதி கட்டும் திட்டத்திற்கு முயற்சி செய்து வருகிறேன். இந்த பகுதி மக்கள் திற்பரப்பு அருவி மேம்பாட்டிற்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த பகுதியில் உயர் தர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைக்கலாம். இது போன்ற செயல்களுக்கு அரசும் ஒத்துழைப்பு அளிக்கும். ரூ.11.98 கோடியில் திருவள்ளுவர் சிலையில் லேசர் விளக்கு தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, அரசு வக்கீல் ஜான்சன், கடையல் பேரூராட்சி தலைவர் ஜூலியட் சேகர், திற்பரப்பு பேரூர் தி.மு.க. செயலாளர் ஜான் எபனேசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாவுபலி பொருட்காட்சி
வாவுபலி பொருட்காட்சியில் தினமும் மாலையில் குமரி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நடைபெற உள்ளன. நேற்று மாலை ஏற்றக்கோடு, நெல்வேலி தனியார் பள்ளிகளும், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார், காப்புக்காடு தனியார் பள்ளிகளும், ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியும் கலந்து கொண்டு விளையாடின.
முன்னதாக கபடி போட்டியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். இறுதி நாளான 21-ந் தேதி கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.