ரூ.4½ கோடியில் இணைப்பு குழாய் பதிக்கும் பணி


ரூ.4½ கோடியில் இணைப்பு குழாய் பதிக்கும் பணி
x

ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூ.4½ கோடியில் இணைப்பு குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. அதில் 39 வார்டுகளில் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர், காவிரி கூட்டு குடிநீர் ஆகியவை மாறி, மாறி வினியோகம் செய்யப்படுகின்றன. ஆனால் மீதமுள்ள 9 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அந்த வார்டுகளில் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.

மேலும் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் தடைபட்டால் 9 வார்டுகளிலும் குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் 9 வார்டுகளிலும் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் கிடைக்கும் வகையில் இணைப்பு குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.4 கோடியே 64 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு 14 கி.மீ. தூரத்துக்கு இணைப்பு குழாய்கள் பதிக்கப்படுகிறது.

இதற்கான பூமிபூஜை திண்டுக்கல் ராஜலட்சுமி நகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதையடுத்து குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி 3 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் 48 வார்டுகளுக்கும் தடையின்றி ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர், காவிரி குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story