4 வழிச்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடுகலெக்டரிடம் விவசாயிகள் மனு
4 வழிச்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
கடலூர் அருகே சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:-
தேசிய நெடுஞ்சாலை 45-ஏ விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் நிலையான சாலைகளில் விரிவாக்கமும், இதர சாகுபடி செய்யும் விளை நிலங்கள் முழுமையாகவும் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகை 2018-ம் ஆண்டு அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இழப்பீடு தொகை மிகவும் குறைவாக இருந்தது. நிலங்கள், நஞ்சை, புஞ்சை, வீடு உள்ள இடம் மனை என பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு தொகை வேறுபாடு அதிக அளவில் இருந்தது. இது பற்றி அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு அளித்தோம். அதன்படி கலெக்டர் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆகவே புதிதாக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் தாங்கள் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.