வெறிநாய்கள் கடித்து 4 ஆடுகள், 25 கோழிகள் சாவு
வேடசந்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 4 ஆடுகள், 25 கோழிகள் இறந்தன.
வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 55). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளையும், பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார். தோட்டத்தின் அருகிலேயே அவரது வீடும் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய்கள், பட்டியில் அடைத்து வைத்திருந்த 4 ஆடுகளை கடித்து குதறின. அதேபோல் அங்கிருந்த நாட்டுக்கோழி பண்ணைக்குள் புகுந்த வெறிநாய்கள், அங்கிருந்த 25 கோழிகளை கடித்துக்கொன்றன.
இதற்கிடையே ஆடுகளின் அலறல் சத்தம் கேட்ட ராஜ்குமார், தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு வெறிநாய்கள் இருப்பதை பார்த்தார். உடனே வெறிநாய்களை விரட்டிவிட்டு, மீதமிருந்த ஆடு கோழிகளை காப்பாற்றினார். இருப்பினும் ஆடுகள், கோழிகள் பலியானதால் ராஜ்குமார் வேதனை அடைந்தார். எனவே காசிபாளையம் பகுதியில் வெறிநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.