அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக லாரிகள் பறிமுதல்
அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கும், பணியாளர்கள் வேலைக்கும் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கக்கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் குழித்துறை வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளங்களை ஏற்றிச் சென்ற 4 கனரக லாரிகளை படந்தாலுமூடு சோதனைச் சாவடி அருகில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.