4 வீடுகள் இடிந்து விழுந்தன


4 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்தன.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்தன.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பனிமூட்டமும் நிலவியது. இதனால் சில பகுதிகளில் குடியிருப்புகளே தெரியாத வகையில் பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது. மழை, பனிமூட்டத்தால் கடுங்குளிர் நிலவியது.

இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஈரப்பதம் காரணமாக கோத்தகிரி அருகே கெங்கரை அம்பாள் காலனியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரது வீட்டின் முன்புறம் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. கட்டபெட்டு பாரதி நகரை சேர்ந்த பாபு என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

வீடுகள் சேதம்

தொடர் மழை காரணமாக கோத்தகிரி அருகே ஓரசோலை காமராஜர் நகர் பகுதியில் நாகம்மாள் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தகர். மேலும் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்தது குறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட நாகம்மாளுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.4,100 வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

கடினமாலா கிராமம் அந்தியரையை சேர்ந்த குமார், சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் தேனாடு ஓம் நகரை சேர்ந்த நீலா மணிகண்டன் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, வீடு இடிந்து பாதிக்கபட்ட 3 பேருக்கு தலா ரூ.4,100 நிவாரண தொகை வழங்கினர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 28 மில்லி மீட்டர், கோடநாட்டில் 15 மில்லி மீட்டர், கீழ் கோத்தகிரியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவானது.


Next Story