ஆன்லைன் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி திருச்சி என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி
ஸ்வீடன் நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஆன்லைன் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஆன்லைன் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் கணேசன் (வயது 27). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாக தனியார் ஆள் சேர்ப்பு இணையதளத்தில் பார்த்துள்ளார்.
உடனே கணேசன் அந்த நிறுவனத்துக்கு தனது பயோ-டேட்டாவை அனுப்பி விண்ணப்பித்தார். ஆன்லைன் மூலம் அந்த நிறுவனத்தினர் நேர்முகத்தேர்வு நடத்தினர். தேர்வின் போது, அவரிடம் மிகவும் அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டுள்ளனர். இவரும் அதற்கு பதில் அளித்துள்ளார்.
போலி விசா
இதனால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கணேசன் இருந்துவந்தார். அதன்படியே, ஸ்வீடன் நாட்டு நிறுவனத்தினர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஸ்வீடன் நாட்டு விசா வாங்கி அனுப்ப ரூ.4 லட்சம் நீங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதை நம்பிய கணேசன், தனது உறவினர்கள், நண்பர்களிடம் கடனை வாங்கி, அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தை செலுத்தி உள்ளார். சில நாட்கள் கழித்து அவர்கள் விசாவை இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளனர். அதை கொண்டு ஸ்வீடன் தூதரகத்தில் விசாரித்த போது, அது போலி விசா என்பது தெரியவந்தது.
ரூ.4 லட்சம் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன், தனக்கு நேர்முகத்தேர்வு நடத்தி, விசாவுக்கு பணம் அனுப்பும்படி கூறிய நபர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, அனைத்து எண்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், தன்னிடம் ரூ.4 லட்சத்தை மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், இதுபற்றி திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கணேசன் அனுப்பிய ரூ.4 லட்சம் உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள ஒருவருடைய வங்கி கணக்குக்கு சென்றுள்ளதும், வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்ட இணையதளம் போலியான இணையதளம் என்பதும், அவருக்கு நேர்முக தேர்வு நடத்தியது மோசடி கும்பல் என்பதும் தெரியவந்தது.
மேலும் 3 பட்டதாரி இளைஞர்கள்
இதேபோன்று மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி பகுதியை சேர்ந்த 3 பட்டதாரி வாலிபர்கள் இதுபோல் வேலைக்காக ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.57 ஆயிரம் என்று பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர்.
இதுபற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பணம் அனுப்பி ஏமாந்த உடன் புகார் கொடுத்திருந்தால் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க ஏதுவாக அமைந்திருக்கும். அவர் தாமதமாக புகார் அளித்துள்ளதால் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட புகார்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைனில் வரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றனர்.