4 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படு கிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
குன்னூர்,
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படு கிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
மின் உற்பத்தி
தமிழக மின்சார வாரியம் சார்பில், ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்னூரில் உள்ள உபாசி அரங்கில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நீலகிரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். குன்னூர் செயற்பொறியாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு 2 லட்சத்து 48 ஆயிரத்து 554 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமாக 1 லட்சத்து 85 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இந்தியா, அண்டை நாடுகளுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரூ.2,200 கோடி சேமிப்பு
கடந்த 2015-ம் ஆண்டு கிராமப்புறங்களில் சராசரி மின் வினியோகம் 12.5 மணி நேரமாக இருந்தது. தற்போது 22.5 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய மின் இணைப்பை பெறுவதற்கு அதிகபட்ச கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் பில் போடுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நுகர்வோர் குறைகளை கேட்டு தீர்ப்பதற்கு மின்வாரியத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அழைப்பு மையங்கள் உள்ளன.
தமிழகத்தில் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கிய ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மாநில அளவில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு, இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 180 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் முயற்சியால் கடந்த நிதியாண்டில் மின் உற்பத்தி நிலையங்களில் திறமையான செயல்பாடு மற்றும் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ரூ.2,200 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக குன்னூர் மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் வரவேற்றார். முடிவில் உபதலை உதவி பொறியாளர் நிர்மல் குமார் நன்றி கூறினார்.