தமிழ்நாட்டில் 4 புதிய ஆஸ்பத்திரிகள் திறக்கப்படும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 2 மாதங்களில் 2 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளுடன் 4 புதிய ஆஸ்பத்திரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கல்லூரிகளில் எல்லாம் ஆஸ்பத்திரிகளை உருவாக்கி விட வேண்டும் என்று உத்தரவிட்டு இதுவரையில் 4 ஆயிரத்து 100 படுக்கைகள் கொண்ட 7 ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 2 ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட 4 ஆஸ்பத்திரிகள் இன்னும் 2 மாதங்களில் திறந்து வைக்கப்பட உள்ளது.
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 52 லட்சத்து 458 பேர் தமிழ்நாட்டில் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி அன்று மேல்மருவத்தூரில் 'இன்னுயிர் காப்போம்' என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார். சாலை விபத்துகளில் சிக்குபவர்களை காப்பாற்றுகிற இந்த திட்டத்தின்படி இதுவரையில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 382 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 363 ஆஸ்பத்திரி கட்டமைப்புகள் இருக்கிறது. இதில் மிகப் பிரமாண்டமான கட்டமைப்பை (கருணாநிதி நூற்றாண்டு ஆஸ்பத்திரி) தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒப்படைத்து இருக்கிறார்.
ஒரு சிலரால் பொறுக்க முடியவில்லை
தமிழ்நாட்டில் 36 மருத்துவ கல்லூரிகள் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை கண்டு ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேசிய மருத்துவ ஆணையம் என்ற நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமரா வலது பக்கத்துக்கு பதிலாக இடது பக்கம் திரும்பி இருக்கிறது என்று சொல்லி புகாரை எழுதுகிறார்கள்.
இந்த கேமரா வலது பக்கம் திரும்பினால் என்ன? இடது பக்கம் திரும்பினால் என்ன?. இதை ஒரு புகாராக எழுதி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கடிதம் அனுப்புகிறார்கள்.
உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்கள் மூலம் டெல்லிக்கு தகவலை தெரிவித்து, அவர்கள் என்னென்ன குறைகளை சொன்னார்களோ? அதனை உடனடியாக சீர் செய்தார். தமிழ்நாட்டில் இருக்கிற 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் மிக பாதுகாப்பாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு உரிமம் நீடிக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவத்துறைக்கு வரும் சவால்களை...
தமிழ்நாட்டில் 7.5 இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதை சிதைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் மருத்துவ படிப்புக்கு பொது கலந்தாய்வு என்று அறிவித்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்து, இது ஜனநாயகத்துக்கு எதிரானது. சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று மறுப்பு கடிதத்தை எழுத சொன்னார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு முதல்-அமைச்சரின் அறிவிப்பையும், எதிர்ப்பு உணர்வையும் ஏற்று அதில் இருந்து பின் வாங்கி இருக்கிறது. இப்படி மருத்துவத்துறைக்கு எந்த சவால்கள் வந்தாலும் அதனை உடனடியாக சரி செய்கிற ஆற்றல் மிக்கவராகவும், தமிழ்நாட்டை காக்கிற ஆபத்து பாந்தவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.