மாடுகளின் காதை அறுத்த 4 பேர் கைது
புவனகிரி அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் 4 போ் மாடுகளின் காதை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புவனகிரி,
புவனகிரி அருகே தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம் (வயது 70). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகள், ஒரு காளைமாடு மற்றும் அதை பகுதியை சேர்ந்தவர்களின் 3 மாடுகள் என மொத்தம் 7 மாடுகள் மேய்ச்சலுக்காக கீழமணக்குடி கிராமத்திற்கு சென்றன. இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய ஆபூர்வத்தின் மாடுகள் உள்ளிட்ட 7 மாடுகளின் காதுகளின் நுனி பகுதி அறுக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபூர்வம் உடனே இதுகுறித்து புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேய்ச்சலுக்கு சென்ற 7 மாடுகளும் அப்பகுதி வயலில் இருந்த பருத்தி மற்றும் நெற்பயிர்களை மேய்ந்ததாக தொிகிறது.
இதை பார்த்து ஆத்திரமடைந்த அதே கிராமத்தை சோ்ந்த சண்முகம், வீரமுத்து, பழனிச்சாமி மற்றும் மேலமணக்குடி கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் ஆகிய 4 பேரும், வயலில் மேய்ந்த மாடுகளை பிடித்து அதன் காதுகளின் நுனி பகுதியை அரிவளால் அறுத்துள்ளனர். இதையடுத்து சண்முகம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.