புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது


புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர்  கைது
x

சாத்தனூர் அருகே மானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

சாத்தனூர் அருகே மானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் ரோந்து

சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.சீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாத்தனூர் வனச் சரகம், பெண்ணையாறு காப்புக் காடுபகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் கருவட்டாம்பாறை அருகே சென்றபோது ஒரு கும்பல் அங்கு இருந்தது.

அவர்களை வனத்துறையினர் நெருங்கியபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். வனத்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து மடக்கினர். அவர்கள் நாட்டு துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் தண்டராம்பட்டு அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மகன் சேகர் (வயது 34), அண்ணாதுரை மகன் சங்கர் (24), தனக்கோட்டி என்பவரது மகன் ஏழுமலை (55)உள்ள செக்கடி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் வரதன் (35) என்பது தெரிய வந்தது.

பறிமுதல்

இதனையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மான் இறைச்சியையும் அவர்கள் கைப்பற்றினர்.

பின்னர் 4 பேரையும் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின் படி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.


Next Story