அண்ணாசாலையில் அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை போன வழக்கில் 4 பேர் கைது


அண்ணாசாலையில் அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் கொள்ளை போன வழக்கில் 4 பேர் கைது
x

சென்னை அண்ணாசாலை பகுதியில் அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துச்சென்ற வழக்கில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கண்ணமங்கலத்தைச்சேர்ந்தவர் சிவபாலன் (வயது 27). இவர், சென்னை பிராட்வேயில் உள்ள கடையில் வேலை செய்கிறார். கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி இரவு இவர், மோட்டார் சைக்கிளில் ராயப்பேட்டைக்கு நண்பரை பார்க்க சென்றார்.

பையில் ரூ.20.22 லட்சத்தையும் எடுத்து சென்றார். அண்ணாசாலை பாரத ஸ்டேட் வங்கி அருகில் செல்லும்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்து, அவரது கையில் அரிவாளால் வெட்டினார்கள். அதில் காயம் அடைந்த சிவபாலன், மோட்டார் சைக்கிளை விட்டு கீழே சாய்ந்தார்.

உடனே அந்த கும்பல், சிவபாலன் பையில் வைத்திருந்த ரூ.20.22 லட்சத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். காயம் அடைந்த சிவபாலன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து, உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சிவபாலன் பணம் கொண்டு செல்வதை தெரிந்து கொண்டுதான், அவரை பின்தொடர்ந்து சென்று இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர விசாரணைக்கு பிறகு தனிப்படை போலீசார் ராஜேஷ், பாக்யராஜ், இஸ்மாயில் மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story