சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது


சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராமச்சந்திரன்(வயது 18). சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடித்த இவர், கூலிவேலை செய்து வந்தார். இவரது தாய் மணிமேகலை, ஈரோட்டில் கரும்பு வெட்டும் வேலை செய்து வருகிறார். எனவே ராமச்சந்திரன், அவரது பாட்டியான பவுனம்பாம்பாள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

ராமச்சந்திரனும், அதே ஊரை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ்(21) என்பவரும் நண்பர்கள். மோகன்ராஜ் மீது திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே மோகன்ராஜியுடன் பேசக்கூடாது என்று ராமச்சந்திரனிடம் அவரது தாய் மற்றும் பாட்டி கூறியுள்ளனர். அதன்படி அவரும் பேசாமல் இருந்து வந்தார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு 8 மணி அளவில் கொத்தனூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனிடம், ஏன் தன்னுடன் பேச மறுக்கிறாய் என்று மோகன்ராஜ் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், இருவரையும் விலக்கி விட்டனர்.

அதன் பிறகு ராமச்சந்திரன் தனது வீட்டிற்கு சென்று மரத்தில் ஊஞ்சல் கட்டி, அதில் படுத்திருந்தார். அப்போது மோகன்ராஜ், தனது நண்பர்களுடன் அங்கு சென்று கத்தியால் ராமச்சந்திரனை வெட்டினார். இதில் கழுத்து வெட்டுபட்டதால் நிலைகுலைந்து விழுந்த அவர், துடிதுடித்து இறந்தார்.

4 பேர் கைது

இதுகுறித்து ராமச்சந்திரனின் உறவினர் சரண் அய்யப்பன் கொடுத்த புகாரின் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர்.

இதனிடையே அதே கிராமத்தில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த மோகன்ராஜ், அவரது நண்பர்களான பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கந்தசாமி, மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேலன் மகன் கஜேந்திரன்(19), 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story