4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி
குமரி மாவட்டத்தில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
4 பேருக்கு அறிகுறி
கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. நமது நாட்டில் இதுவரை கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள்
இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
குரங்கம்மை அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் 4 பேருக்கும் 5 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் உடலின் பல இடங்களில் தடிப்புகளும் காணப்படுகின்றன. குரங்கம்மை நோய் என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான், என்ன நோய் என்பது தெரிய வரும் என்றனர்.