ஒரே பெஞ்சில் 4 பேர் பி.எட். தேர்வு எழுதியதால் பரபரப்பு
திண்டிவனம் அரசு கல்லூரியில் ஒரே பெஞ்சில் 4 பேர் அருகருகே அமர்ந்து பி.எட். தேர்வு எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டிவனம்
பி.எட். தேர்வு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது.
இதே போல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எட். தேர்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இங்கு திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 7 கல்வியியல் கல்லூரிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
அருகருகே அமர்ந்து...
இந்த நிலையில் நேற்று காலை பொதுவான கற்றல் மற்றும் கற்பித்தல் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு பெஞ்சில் இரு மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய இடத்தில் 4 மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்லூரிக்கு வேலை நாள் என்பதால் வகுப்புகள் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. எனவே வகுப்புகளும் நடைபெற வேண்டும். தேர்வும் நடைபெற வேண்டும். சனி, ஞாயிறு போன்ற கல்லூரி விடுமுறை நாட்களில் தேர்வு வைத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. போதிய இட வசதி இல்லாததால் வேறு வழியில்லை என கல்லூரி தரப்பில் கூறப்பட்டது.
பரபரப்பு
ஒரே பெஞ்சில் 4 பேர் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.