9-ம் வகுப்பு மாணவர் உள்பட 4 பேர் பலி


ராசிபுரம் அருகே விவசாய கிணற்றுக்குள் மொபட் பாய்ந்ததில் 9-ம் வகுப்பு மாணவர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் மாணவர்களை மீட்க சென்ற 3 பேரும் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

ராசிபுரம்

அரசு பள்ளி மாணவர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கார்கூடல்பட்டி ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் அபினேஷ் (வயது 15). இவர் ராஜபாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிலிப்பாக்குட்டை சமத்துவபுரத்தை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் விக்னேஷ் (13) 9-ம் வகுப்பும், பிலிப்பாக்குட்டையை சேர்ந்த சீனிவாசன் மகன் நிதிஷ்குமார் (15) 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். மாணவர்கள் 3 பேரும், நேற்று மதியம் 2 மணியளவில் கே.கணவாய்பட்டியில் இருந்து மொபட்டில் பிலிப்பாக்குட்டைக்கு சென்றனர்.

மொபட்டை மாணவர் அபினேஷ் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அந்த சாலையில் உள்ள வளைவு பகுதியில் சங்கீதா என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு அருகே மொபட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொபட் நிலைதடுமாறி, சாலையோரம் தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் மொபட்டுடன் 3 மாணவர்களும் கிணற்றுக்குள் விழுந்தனர். இதனிடையே மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு, நிலத்தின் குத்தகைதாரர் மணிகண்டன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றுக்குள் சிக்கிய 6 பேர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அபினேஷின் தந்தை குப்புசாமி (45), கந்தசாமி மகன் சரவணன் (35), மாரிமுத்து மகன் அசோக்குமார் (35) ஆகியோர் கயிறு மூலம் மாணவர்களை மீட்க கிணற்றில் இறங்கி உள்ளனர்.

ஆனால் கிணற்றில் இறங்கிய 3 பேரும் தண்ணீருக்குள் மூழ்கிய சிறிது நேரத்திலேயே திடீரென மயங்கி உள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் 6 பேர் கிணற்றுக்குள் சிக்கிய தகவல் அறிந்து, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசாரும், நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார், ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் பலி

முதல் கட்டமாக மாணவர்கள் அபினேஷ் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் மீட்கப்பட்டு ராசிபுரம் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதி மக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியோடு, பலியான மாணவன் விக்னேஷ் மற்றும் மீட்க சென்று இறந்து போன குப்புசாமி, அசோக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் உமா கூறியதாவது:-

மாணவர்கள் 3 பேரும் மொபட்டில் வந்து வளைவு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். அவர்களை மீட்க இறங்கிய 3 பேரும் கிணற்றுக்குள் சிக்கியுள்ளனர்.

சாலையோர கிணறுகள் அருகே தடுப்புகள்

இதில் எதிர்பாராதவிதமாக ஒரு மாணவரும், மீட்க சென்ற 3 பேரும் என மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று சாலையோரம் உள்ள கிணறுகளுக்கு, தடுப்புகள் அமைக்க வேளாண்மைத்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் உமா கூறினார்.

ராசிபுரம் அருகே விவசாய கிணற்றுக்குள் மொபட் பாய்ந்ததில் 9-ம் வகுப்பு மாணவர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகனை மீட்க சென்ற தந்தை பலியான சோகம்

மாணவர் அபினேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்த தகவல் அறிந்ததும் அவரின் தந்தை குப்புசாமி, மகனை மீட்க கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆயினும் அவர் துரதிர்ஷ்டவசமாக கிணற்றுக்குள் மயங்கி பரிதாபமாக இறந்தார். ஆனால் அவரது மகன் அபினேஷ் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

பலியான 4 பேரில் குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகிய 3 பேர் கே.கணவாய்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் மாணவர் விக்னேஷ் அருகில் உள்ள பிலிப்பாக்குட்டை சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இதனால் இரு கிராமங்களும் பெரும் சோகத்தில் மூழ்கின.

பலியான அசோக்குமாருக்கு நித்தியா (27) என்ற மனைவியும், பிரதீப் ராஜா (7) என்ற மகனும், இனியா (6) என்ற மகளும் உள்ளனர். மேலும் குப்புசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும், அபினேஷ் என்ற மகனும், அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர். சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை.

ஆஸ்பத்திரியில் கதறி அழுத உறவினர்கள்

கணவாய்பட்டியில் கிணற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதையொட்டி பலியானவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் ராசிபுரம் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் தரையில் உருண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

அஞ்சலி செலுத்திய அமைச்சர்

கிணற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவன் உள்பட 4 பேரின் உடல்களுக்கு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


Next Story