தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
வாங்கல் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி
வாங்கல் செம்மடை சிப்கோ பகுதிகளில் தொடர்ச்சியாக செல்போன் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து திருட்டை தடுக்கும் விதமாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுபடி, கரூர் நகர உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் வாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வாங்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது வேலாயுதம்பாளையம் புகழிநகரை சேர்ந்த ரகுமான் என்கிற சாகுல்ஹமீது (வயது 23), கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு செட்டியார் தோப்பு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (21) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து சிறுவர்கள் உள்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்கள், ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.