கணவன்-மனைவி, மகன் உள்பட 4 பேர் பலி
கணவன்-மனைவி, மகன் உள்பட 4 பேர் பலி
நன்னிலம் அருகே குளத்தில் கார் பாய்ந்ததில் கணவன்-மனைவி, மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
குலதெய்வ கோவிலுக்கு...
சென்னை கிழக்கு தாம்பரம் மணிமேகலை தெரு, சீனிவாசா என்கிளேவ் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் கணேசன்(வயது 72). இவரது மனைவி பானுமதி(65), மகன் சாமிநாதன்(36), மருமகள் லட்சுமி(30), சாமிநாதனின் ஒரு வயது குழந்தை லட்சுமி நாராயணன்.
இவர்கள் அனைவரும் தாம்பரத்தில் இருந்து ஒரு காரில் திருவாரூர் அருகே உள்ள ஓடாசேரிக்கு கணேசனின் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். கடந்த சனிக்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வந்தனர்.
குளத்திற்குள் கார் பாய்ந்தது
லட்சுமியின் பெற்ேறார் வீடு மயிலாடுதுறை வடக்கு ராமலிங்கா தெருவில் உள்ளது. லட்சுமியின் பெற்றோர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதால் இவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினர்.
நேற்று காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஓடாச்சேரியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றனர். கோவிலுக்கு சென்ற அவர்கள் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மதியம் 3 மணிக்கு திரும்பி உள்ளனர். காரை சாமிநாதன் ஓட்டினார்.
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள விசலூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக சென்ற கார், வலது புறம் உள்ள குளத்திற்குள் பாய்ந்தது.
கார் கதவை திறக்க முடியவில்லை
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இதுகுறித்து நன்னிலம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும், நன்னிலம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்திற்குள் இறங்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தண்ணீரில் மூழ்கி இருந்த காரின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் காரின் கதவை திறக்க முடியவில்லை. அப்போது காருக்கு உள்ளே இருந்த லட்சுமி கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
கணவன்-மனைவி, மகன் உள்பட 4 பேர் பலி
இதனைத்தொடர்ந்து லட்சுமியை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள லட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காருக்குள் இருந்த கணேசன், பானுமதி, சாமிநாதன் மற்றும் ஒருவயது குழந்தை லட்சுமி நாராயணன் ஆகியோரை மீட்டபோது அவர்கள் 4 பேரும் உயிர் இழந்தது தெரிய வந்தது.
ஆதார் அட்டை மூலம் அடையாளம் தெரிந்தது
விபத்தில் பலியானவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது முதலில் அவர்களை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. காரில் இருந்த ஒரு ஆதார் அட்டையை வைத்து விபத்தில் பலியானவர்களை அடையாளம் காண முடிந்தது.
இதனைத்தொடர்ந்து விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சோகம்
இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது குளத்திற்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.