கள் விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது
சின்னசேலம் பகுதியில் கள் விற்ற தம்பதி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தென்னை மரத்தில் கட்டப்பட்ட கலயங்களை அடித்து உடைத்தனர்
சின்னசேலம்
ரகசிய தகவல்
சின்னசேலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நைனார்பாளையத்தை சுற்றியுள்ள பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கியும் மற்றும் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீழ்குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் பெத்தாசமுத்திரம் கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தென்னை மரத்தில் ஏராளமான மண் கலயங்கள் கட்டப்பட்டிருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் சென்று பார்த்தபோது கலையத்தில் கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அடித்து உடைத்தனர்
விசாரணையில் பெத்தாசமுத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த கதிர்வேல் மகன் பழனிவேல்(வயது 55) என்பவர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து பதநீர் எடுப்பதாக கூறி தென்னங்கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பழனிவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த கலயங்களை அடித்து உடைத்தனர்.
தம்பதி கைது
இதேபோல் கருந்தலாகுறிச்சி பகுதியில் தென்னங்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்த பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த முனியன்(27), இவரது மனைவி சரண்யா(26) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் தென்னங்கள், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
இது தவிர பாக்கம்பாடி ஏரி கரையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி சென்ற சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(25) என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்துடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.