டிராக்டர் டிரைவரை தாக்கிய 4 பேர் சிறையில் அடைப்பு
டிராக்டர் டிரைவரை தாக்கிய 4 பேர் சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னபட்டாகாடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 35). டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரோடு போடுவதற்கான ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு கோவிலூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 4 பேர் இங்கு ஜல்லிக்கற்களை இறக்கக்கூடாது என கூறி சத்தியமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அவர்களை பேசி சமாளித்து ஜல்லிக்கற்களை கொட்டிவிட்டு அங்கிருந்து சத்தியமூர்த்தி புறப்பட்டுள்ளார். செட்டிகுழி பிரிவு பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே 4 பேரும் சத்தியமூர்த்தியின் டிராக்டரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சத்தியமூர்த்தி திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிலூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்(29), அஜித்குமார்(24), ரகுராமன்(26), அரவிந்த்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.