சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கும்பகோணம்:
சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் பரமசிவம்(வயது 38). பிளக்ஸ் போர்டு தயார் செய்து கொடுக்கும் கடை வைத்து நடத்தி வந்த இவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டனுக்கும்(இவர் மளிகை கடை நடத்தி வந்தார்), பரமசிவத்துக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
முன்விரோதத்தால் தகராறு
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் 6-ந் தேதி இரவு 7.30 மணியளவில் கக்கன் காலனி திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் பரமசிவம் பேசிக்கொண்டு இருந்தார்.
ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
அப்போது அங்கு வந்த மணிகண்டன்(34), தனது தந்தை ஏழுமலை(60), தம்பி மணிமாறன்(31), பெரியப்பா மகன் முருகன்(53), அதே பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் அய்யப்பன்(32), முல்லை நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் கார்த்திக்(31) ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பரமசிவத்தை வெட்டியதில் படுகாயம் அடைந்த பரமசிவம் அங்கிருந்து உயிர்தப்பி ஓடினார். உடனே மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரமசிவத்தை ஓட, ஓட விரட்டிச்சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதத்தால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரமசிவம் உயிரிழந்தார்.
6 பேர் கைது
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன், மணிமாறன், ஏழுமலை, முருகன், அய்யப்பன், கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்ட மணிகண்டன், மணிமாறன், அய்யப்பன், கார்த்தி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
குற்றம் நிரூபிக்கப்படாத ஏழுமலை மற்றும் முருகன் இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.