நிலக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண்
மதுரையில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், நிலக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
மதுரை பெரியார் பஸ்நிலையம் நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சதக்அப்துல்லா (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர், மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு இவர், பெரியார் பஸ்நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள், சதக் அப்துல்லாவின் தலையில் கல்லை போட்டு தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் சதக் அப்துல்லா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
4 பேர் கோர்ட்டில் சரண்
இதுகுறித்து மதுரை திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக், சிவா, சந்துரு, சரவணக்குமார் ஆகிய 4 பேர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு நல்லகண்ணன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் அவர்களை திண்டுக்கல் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.