அனுமதியின்றி கற்களை கடத்தி வந்த 4 பேர் கைது
குன்றக்குடி அருகே அனுமதியின்றி கற்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி,
குன்றக்குடி போலீசார் ஆத்தங்குடி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமயத்தில் இருந்து அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 3 லாரிகளிலும் திருமயம் பகுதியில் மலைகளில் இருந்து உடைத்து எடுத்து வரப்பட்ட பெருங்கற்கள் அப்பகுதியிலுள்ள கிரஷர் தொழிற்சாலைக்கு உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.உடனே போலீசார் 3 லாரிகளையும் அதில் இருந்த மலைப்பகுதியில் இருந்து உடைத்து எடுத்து வரப்பட்ட பெரும் கற்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரி டிரைவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் (வயது 36) காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (53) மற்றும் லாரிக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வழியில் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்களா? என்று கண்காணித்து லாரி டிரைவர்களுக்கு தகவல் தெரிவித்து வந்த லாரியின் கிளீனர்கள் ஒடிசாவை சேர்ந்த மனு (30) கோபால் சிங் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களையும் தேடி வருகின்றனர்.