தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 4 பேர் சிக்கினர்


தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 4 பேர் சிக்கினர்
x

கன்னியாகுமரியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 4 பேர் சிக்கினர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 4 பேர் சிக்கினர்.

2-வது நாள் ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன் வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் சார்பில் தமிழகத்தில் கடலோர பகுதியில் 'சீ விஜில்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று 2-வது நாளாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

படகுகளில் சென்று கண்காணிப்பு

சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து உவரி வரை படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்னொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலோர பாதுகாப்பு குழும சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

4 பேர் சிக்கினர்

இந்தநிலையில் போலீசார் கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியாகுமரியில் ஊடுருவிய 4 பேர் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் போல் ஒரு படகில் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் அதிவிரைவுப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கமாண்டோ படையை சேர்ந்த 2 போலீசார், இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த ஒருவர் என்பது தெரிய வந்தது.


Next Story