சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
வழிப்பறி வழக்குகள்
சேலம் கன்னங்குறிச்சி பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 29). இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் உள்ளன. இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர். இதே போன்று முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த ஜாபர்அலி (35) என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மிரட்டி பணம், செல்போன்களை பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் அந்த பகுதியில் வாலிபரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணம், நகையை பறித்தார். தொடர்ந்து எடப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளில் புகுந்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
அம்மாபேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 4 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த பிறகு தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, கமிஷனர் நஜ்மல் ஹோடாவிற்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவர்கள் 4 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள கோகுல்நாத், ஜாபர்அலி, கார்த்திக், பாலமுருகன் ஆகிய 4 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.