மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய 4 பேர் கைது
நெல்லை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் சிந்தாமதார். தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிகுமார் மகன் முருகேசன் (வயது 20), மாசாணமுத்து மகன் ஆறுமுகம் (22), திருமால்நகரை சேர்ந்த முத்துகுமார் மகன் மகாராஜன் (22) மற்றும் சிலருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்யாண போஸ்டரை கிழித்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிந்தாமதார் தனது மோட்டார் சைக்கிளை தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். அந்த மோட்டார் சைக்கிளை முருகேசன், ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் அரிவாளால் சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த சிந்தாமதாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் வழக்குப்பதிவு செய்து முருகேசன், ஆறுமுகம், மகாராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். சிறுவன் அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார்.