மூதாட்டியிடம் நூதன முறையில் 4½ பவுன் நகை திருட்டு
குடியாத்தத்தில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் 4½ பவுன் நகை திருட்டு நடந்துள்ளது.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த பொகளூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்து தான் போலீஸ் என்றும் திருட்டு சம்பவங்கள் அதிகமாக உள்ளது என்றும் அதனால் பத்திரமாக இருங்கள் என கூறியுள்ளார். அப்போது மற்றொரு மர்ம நபரும் அதேபோன்று கூறியுள்ளனர். பினனர் நகைகள் போட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்து எனவும், நகைகளை கழற்றிக் கொடுங்கள், பத்திரமாக பொட்டலமாக கட்டி தருகிறோம் பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய அந்த மூதாட்டி தன்னுடைய இரண்டு வளையல்கள், கழுத்தில் இருந்த செயின், கம்மல் என 4½ பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். அதனை மர்ம நபர்கள் மடித்து மூதாட்டியின் பையில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பஸ் ஏறி சொந்த கிராமத்திற்கு சென்ற மூதாட்டி சசிகலா வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதில் நகைகள் இல்லை.
இதுகுறித்து அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.