தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய இரண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மூதாட்டி
தூத்துக்குடி தனசேகரன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சுசீலா (வயது 75). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் முன்பு உள்ள செடியில் பூப்பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அதனை கண்டுகொள்ளாமல் சுசீலா பூப்பறித்துக் கொண்டு இருந்துள்ளார்.
நகை பறிப்பு
அப்போது அந்த மர்ம நபர்கள் திடீரென்று வேகமாக வந்து சுசீலா கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர். பதறிப்போன சுசிலா திருடன்...திருடன் என கூச்சலிட்டவாறு பின்னால் ஓடினார். ஆனால் அதற்குள் அந்த 2 மர்ம நபர்களும் வேகமாக ஓடி, அருகில் தயாராக நிறுத்தி வைத்து இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி ஓடியுள்ளனர்.
போலீசார் வலைவீச்சு
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்களும் மர்மநபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர். இது குறித்து சுசீலா தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.