சேலம் அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங்:சீனியர் மாணவர்கள் 4 பேர் கைது
சேலம் அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் புகார் எதிரொலியாக சீனியர் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் திருமலைகிரியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர், சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கல்லூரி நுழைவு வாயிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சிலர் திடீரென விக்னேசை சைக்கிள் செயினை கொண்டு சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் விக்னேசின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே கல்லூரியில் எம்.ஏ.படித்து வரும் அஜித் (வயது 22), கவுதமன் (22), தீனா, விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். சீனியர்களான தங்களுக்கு ஜூனியர் விக்னேஷ் உரிய மரியாதை கொடுக்காததால் அவரை தாக்கியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சேலம் அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் காரணமாக நடந்த மோதலில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.