9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 4 பேர் மீட்பு


9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 4 பேர் மீட்பு
x

மாத்தூரில் மாயமான 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீசார் மீட்டனர்.

புதுக்கோட்டை

4 மாணவர்கள் மாயம்

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் திவாகரன் (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் தீனதயாளன் (14). மேலும் அதே பகுதியை சேர்ந்த மருதையா என்பவரது மகன்கள் ஹிதேஷ் குமார் (14), பிரமோஷ்குமார் (13). சிறுவர்கள் 4 பேரும் மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்தநிலையில் 4 சிறுவர்களும் நேற்று முன்தினம் காலை அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக புறப்பட்டு சென்றனர். பின்னர் மாலை வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவர்கள் 4 பேரும் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவர்கள் கிடைக்காததால் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பள்ளி மாணவர்களை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது அவர்களாக வேறு எங்காவது சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாணவர்கள் 4 பேரும் நேற்று விராலிமலை ஒன்றியம் விளாபட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றபோது அவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story